Wednesday 21 March 2012

தினம் ஒரு விடியல் என் வானிலே!

           என் வாழ்வில் தவறாமல் நிகழும் ஒரு சம்பவம் விடியல். உறக்கம் கலைந்து என் விழிகளைத் திறந்தவுடன் விடிந்து விடுகிறது என் வானம். ஒவ்வொரு விடியலும் வெவ்வேறான மனோபாவங்களுடனே விடிகின்றது! ஆசைகளும் எதிர்ப்பார்ப்புக்களும் தழும்ப, கனவினை மறுத்து ஏங்கி தவித்த விடியல்கள் உண்டு.. சுமையான நிஜங்களைத் தூர எறிந்து விட்டு கனவுகளில் ஒளிந்து கொண்ட விழிகள் ஏற்க மறுத்த விடியல்களும் உண்டு! கண்களில் ஓரம் ஒட்டிக் கொண்டிருந்த உறங்கங்களில் விடிந்தும் விடியாத விடியல்கள் உண்டு. எந்த வகை விடியல் என்றாலும் தவறாமல் என் வாழ்வில் நிகழும் ஒரு சம்பவம் விடியல்.

Friday 2 March 2012

மெல்லிய கயிறு.

சில நிதர்சனமான உண்மைகள்
கொடுக்கும் வலிகளின் தன்மையை
விவரிக்க முடியும் எனில்
கண்ணீர் துளிகள் படைக்கப்படாமல்
இருந்திருக்கக் கூடுமோ?
சப்த நாடியும் ஒடுங்கி
அமர்ந்திருக்கும் வேளையில்
வெறித்து பார்க்கும் விழிகளைச்
சில சமயம் கண்ணீர் கூட
நனைத்திட மறுத்து விடுகின்றதே?
யோசனையே இல்லாமல்
யோசித்துக் கொண்டிருக்கும் கணங்கள்
கனத்து நிற்பது
அந்த இதயம் மட்டுந்தானே அறியும்!!
தோல்வி, மரணம், துரோகம், ஏமாற்றம்
இப்படி இடிந்து விழுகையில்
இதயம் நொறுங்கினாலும்
உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில்
தொங்கி கொண்டே இருக்கின்றது
ஒரு மெல்லிய கயிறு.
புதையாமல் நாம்
அதை பிடித்துக் கொண்டே
மேலேறி விடுகின்றோம்!!