Tuesday 31 January 2012

உன்னோடு எனக்கு ஒரு வாழ்வு வேண்டும்

உன் இதழோர புன்னகை போதும்.
உன் தோள் சாய்ந்து
ஓர் உறக்கம் வேண்டும்.
உன் விரல் சேர்த்து
மெது நடை போக வேண்டும்.
உன் பார்வைதனில்
கொஞ்சம் முகம் சிவக்க வேண்டும்.
என் கண்ணீர் மண்ணைத் தொடும் முன்னமே
உன் கை அதை தாங்கி பிடிக்க வேண்டும்.
என்றாவது ஒரு நாள்
எனக்கு மரணம் வேண்டும்.
அன்று உன் அணைப்பினில்
என் ஜனனம் முடிவுற வேண்டும்.

என் கோபத்திலும் கொஞ்சம் கவிதை கிடக்கு!!

சில பொழுதுகளில் வறண்டு போகும்
என் கவிதைகள்.
தேடி தேடி பார்த்து
வார்த்தைகள் கிட்டாமல்
மெளனத்தில் கூட
கவிதைகள் வடித்திருக்கிறேன்.
இருண்ட இதயம் துவண்டு கிடக்கையில்
எழுத மனமின்றி
வழிந்தோடிய கண்ணீரில்
ஓராயிரம் கவிதைகளை
கசிய விட்டிருக்கிறேன்.
இன்பம் சூழ்ந்து கொள்ளும்
கணங்களில்
புன்னகையினூடே பல கவிதைகளை
இறைத்திருக்கிறேன்.
கவிதை என்பது
வெறும் எழுத்தின் வடிவம் அல்ல.
உணர்வுகளின் உச்சம்.
என் கோபத்திலும்
கொஞ்சம் கவிதை கிடக்கு!!

Wednesday 18 January 2012

வெகு தூரத்தில் நீ!

நீதானா? இது நிஜம்தானா?
வியப்புக்குறியாகி நிற்கிறேன்!
சில நிஜங்கள் நம் கற்பனைகளுக்கு
அப்பாற்பட்டது!!
உயிரின் மரணம் நிச்சயம்
என்பது எனக்கு தெரியும்..
ஆனால்,
உயிரோடு இருக்கையில்
என் உணர்வுகள் மரிக்கின்றதே!!
இனி, என் ஆயுளின் ஆழம்
நீதான் என நான் நினைத்திருக்கையில்
அது வெறும் ஆயுள் தண்டனையாய்
மாறி என்னைப் பரிகசிக்கின்றதே!
நம் திருமண பந்தம்
தூய காதலில் இணைந்தது என்று
நான் களித்திருக்கையில்
தட்டி எழுப்பி
உச்சந்தலையில் ஓங்கி அடித்து
கூறி விட்டாய்
"காமம் கலைந்து விட்டதென்று"!
உன் மனதிற்குள் இன்று
வேறு ஒரு பெண்ணின்
சுவாசம் துடிப்பதாய்
என்னிடமே கூறுகின்றாய்.
அது சுவாசம் அல்ல
வெறும் காமப் பசி என்று
எனக்கு தெரியும்.
அந்த பெண்ணுக்கு?
திருமணமானவன் என்று தெரிந்தும்
உன் மேல் மையல் கொண்ட
அந்த பெண்ணுக்கு மட்டும்
காதலின் அர்த்தம் புரிந்து விடுமோ?
நிர்கதியாய் நிற்கிறேன்
ஆனால்,
தூய்மையானவளாய் உண்மையானவளாய்
நிற்கிறேன்.
தர்மமும் என் உண்மைக் காதலும்
என்னை காக்கும்.
நாளை உனக்கும் புரியும்
காமம் கடந்த பின் தாங்கி பிடிக்க
சத்தியம் காக்கும் மனையாள்
வேண்டும் என்று!
அன்று,
தூரத்தில் தெரியும் நிலவு
வெறும் எட்டாக் கனியாகி விடும்.

Tuesday 17 January 2012

கள்ளிபாலேனும் கிடைக்குமா?



வறண்டு கிடக்கு என் நாக்கு
என் தாயின் மார்பை போலவே!!

 உடம்பின் ஒவ்வொரு இயக்கமும்
மூளையின் செயல்பாட்டில் நிகழும்
என்பதால்தான் பசிக்க வில்லை
எனக்கு!!
ஏனெனில்
பசியை உணரும் அளவிற்கு
மூளைக்குத் தெம்பு இல்லை!!

ஊண் உண்டு வாழ வேண்டும்
என்ற நியதியைப் படைத்த
இறைவா
பின்பு என்னை ஏன் படைத்தாய்?

நீ தந்த வாழ்வு இங்கே,
எனக்கான உணவு எங்கே?

ஒரு துளி கிடைக்குமா?
கள்ளிப் பாலாய் இருந்தாலும்
ஒரு துளி கிடைக்குமா எனக்கு?

அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.



புதைகுழிக்குள் என் கண்மணி
சுருண்டு கிடக்கிறாளே!!!

நோய் கண்டு மடிந்திருந்தால்
மார்தட்டி கதறி அழுதிருப்பேன்.
விபத்தொன்றில் முட்டி
இறந்திருந்தால்,
கால தேவனைச் சபித்து
சமாதானம் அடைந்திருப்பேன்.
பசியுண்டு மடிந்தாளே - மகளே
யாரைப் பழிச் சொல்லி
அழுவேன் நானே?

எட்டி நின்று உச்சுக் கொட்டும்
மனிதர் தம் மேன்மை கண்டு
கொந்தளிக்கவோ?
வயிறு முட்ட உண்ட பின்பும்
வாழ்வை வெல்லும் திராணி இல்லா
மனிதர் தம் வலிமைக் கண்டு
குமுறவோ?

என் செய்வேன் நான்?

புதைகுழிக்குள் என் கண்மணி
சுருண்டு கிடக்கிறாளே!!!

இறைவா,
தினம் நீ நீராடும் பாலில்
ஒரு துளி போதுமே
என் மகள் வாழ்ந்திருப்பாளே!!
பாலில் உன்னை நனைத்த
மனிதர்- என் பெண்ணைப்
புதைத்தனரே?

நீ என் செய்வாய்!!

உன் கரங்களை மனிதர்க்குக்
கொடுத்து விட்டு
கையலாகாதவன் ஆனாய்!!

உன் கால்களை மனிதர்க்குக்
கொடுத்து விட்டு முடமானாய்!!

இதழ்களைத் தந்து விட்டு
மெளனமானாய்!!

இறைவா,
இதயத்தினை மட்டும் உன் வசம்
வைத்துக் கொண்டதால்
நீ இறையானாய்!!
இதயமற்ற மனிதன் மத்தியில்
என்னைப் போல்
நீயும் இரையானாய்!!!

என் வறண்ட பூமி
வளம் பெறுமாயின்
வாய்க்கரிசி போடும்
வழக்கத்தைத் தடை விதிப்பேன்
அன்று.

வாயுள்ள மனிதனுக்குப் போய்
சேரட்டும் அவை
உயிரூட்டும் சோற்றுப் பருக்கைகளாய்!!!

 
அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்