Sunday 24 June 2012

விதிவிலக்கு

தினம் ஒரு காயம்..
அதில் புன்னகை விதிவிலக்கு...
தினம் தாங்கொண்ணா பசி..
அதில் உணவென்பது ஒரு விதிவிலக்கு..
தினம் துளி துளியாய் போகும் உயிர்..
அதில் வாழ்வென்பது விதிவிலக்கு...
இவ்வகை வாழ்வுண்டு மனிதர் பலருக்கு..
அதில் நாம் விதிவிலக்கு...

Tuesday 12 June 2012

நான் மனிதன் அல்ல;ஈழத்தமிழ்ப் பெண்

மண் தன் மடி மேல்
தாங்கி நிற்கும் என்னைப்
பரந்து விரிந்த வானம்
அணைத்துக் கொள்கிறது
தன் நீல நிற போர்வையில்....
... ஏனெனில்,
நிர்வாணமாய்க் கிடக்கிறேன்
நான் பூமிப் பந்தில்!!
மெல்ல ஒழுகிக் கொண்டிருக்கிறது
உதிரங்களினூடே எனதுயிர்!!!
மண் முழுதும் சிதறிக் கிடக்கு
எனது பெண்மை!
பூப்பெய்த கணமும்
கற்பிழந்த நொடியும்
நினைவில் இல்லை எனக்கு!
ஏனெனில்,
வெறி பிடித்த மிருகங்கள்
குதறிப் போட்ட மிச்சம்
நான்!!
வலி என்ற சொல்- இன்று
என்னுள் வலிமையற்றதாகி விட்டது!!
காலடித்தடங்களும் எள்ளி நகையாடும்
குரல்களும் கேட்கின்றது!!
பெண்ணென்றால் அணைத்து
மோகத்தினைத் தீர்த்துக் கொண்டிருப்பர்!
ஈழத்துதமிழ் பெண்ணென்பதால்
என்னைக் கிழித்துத்
தன் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
வழிந்து கிடக்கும் என் கற்பினை
மிதித்துக் களிக்கின்றனர்.
மரணம் கூட என்னை
அணு அணுவாய் ரசித்துக்
கொல்கிறது!!!
விழி நீர் ஒன்று கசிகின்றது
ஈழத்தமிழரின் நிலைக் கண்டு!
உடைகளற்ற நிராயுதபாணியாய் நிற்கும்
என்னைப் பார்த்துத் தூரத்தில்
நாய் ஒன்று ஓலமிடுகின்றது!!
நான் மனிதன் அல்ல
ஈழத்தமிழ்ப் பெண்!!
"

ஒரு புன்னகை..

சின்னதாய் ஒரு புன்னகை
உன் இதழோரம் பூக்கையில்
ஓராயிரம் அர்த்தங்கள்
என் மனம் படிக்கின்றது.
எனக்கான புன்னகை என்றும்
என்னால் தோன்றியது என்றும்
என் நினைவில் மலர்ந்தது என்றும்
கற்பனை செய்து கொள்ளும்
இதயம் இறுதி வரை
புரிந்து கொள்ளவே இல்லை!
உன் புன்னகையின் முற்றுப்புள்ளியில் கூட
இவள் காதலின் சொட்டுத்துளி
இல்லை என்று!!
"

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை...
அந்த இளவேனிற்காலம்
வேண்டும் மீண்டும் ஒரு முறை....
தரையை மறந்து
சிறகுக் கட்டி வானில் பறந்த
அந்த பருவம்
வேண்டும் எனக்கு
மீண்டும் ஒரு முறை...
கடந்த காலமும்
மரணமும் ஒன்றென்று
உணர்ந்த பின்னும்
ஏங்கும் இந்த மனம்
உண்மையாய் வாழத் துடிக்கிறது
மீண்டும் ஒரு முறை...