Thursday 23 February 2012

வினாடிகளின் விலாசங்கள்

                எழுத்துக்களைத் தாங்கும் நோட்டுப்புத்தகங்களுக்குப் புரியும் அந்த கீறல்களின் வலி. வலி மிகுந்த அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் மிகவும் வலியது!! எத்தனை மரணங்கள் அடைந்து மீண்டும் ஜனனங்கள் எடுத்திருப்பேன்? அந்த ஒவ்வொரு ஜனனங்களில்தான் எத்தனை எத்தனை மரண வலிகள்!! கடந்து வந்த பாதைகள் நாம் பயணிக்கும் பாதைகளைச் செம்மைப்படுத்திட வேண்டும். தூரத்தில் காத்திருக்கும் பாதையின் நீளம் எவரும் அறியார்.

               முட்கள் தைக்கும் பாதைகளில் ஆங்காங்கே சில பூக்களும் தூவப் பட்டிருக்கும் என்பதை அவப்பொழுது நான் உணர்ந்திருக்கிறேன். விழுந்து பின் முட்டி மோதி எழுகையில்தான் மனித வாழ்வின் மகத்துவம் அடங்கியுள்ளது என்று நம்புகின்றேன். சில சமயங்களில் தோற்பதன் மூலம்தான் வெற்றி அடைய முடியும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். சில வெற்றிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறேன். எது எப்படி இருப்பினும் நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நானாகவே இருக்கவும் விரும்புகிறேன். என் இறந்த காலம் இறந்த பின்னும் நினைவுகளாய் எனக்கு மிகச் சிறந்த பாடங்களாய் என்னுடன் பயணிக்கின்றது. எதிரே காத்திருக்கும் என் எதிர்காலம் விடுகதையாய் வெறும் கனவுகளின் பிம்பங்களாய் என்னுடன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. என் இதயத்துடன் துடிக்கும் இந்நொடியோ என்னை வாழ அழைக்கின்றது. நினைவுகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டே கழிகின்றது என்னைச் சலிக்காமல் சுமக்கும் நிஜமான இவ்வினாடி...


அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.

Saturday 18 February 2012

சில மெளனங்கள் வார்த்தைகளாய்!!

நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
ஏனென்று தெரியாமல்
என்னவென்று புரியாமல்
புழுங்கி துடித்து
பின்னொரு நாள்
எதுவும் நமக்கு சாதகமானது இல்லை
என்றான பின்,
கண்ணீர் சொரிந்து
காலம் இழுத்துச் செல்ல
அவப்பொழுது ஏக்கமாய்
திரும்பி பார்த்து
மீண்டும் பயணித்த போதும்
நாகரீகம் பார்த்து கூறாமல்
விட்டுப் போன வார்த்தைகள்
அவப்பொழுது கொடுக்கின்றன
சாட்டை அடிகள்..
சில மெளனங்களை
நிரப்பி இருந்தால்??

மீண்டும் அந்த பாடல் ஒலிக்கையில்...

சில பாடல்களில் தொலைவது
நம் மனம் மட்டுமல்ல
சில காயங்ளும்தான்.
சில பாடல்களில் விழிப்பது
நினைவுகள் மட்டுமல்ல
சில வலிகளும்தான்..

அந்த சில வார்த்தைகள்!

ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!
தன் காதலின் ஆழத்தை
உணர்த்த முற்படுகையில்..
காயத்தின் வலியை
விளக்க முயலுகையில்..
வழியும் கண்ணீரின் காரணத்தைச்
சொல்ல விரும்புகையில்..
பிரிவின் துயரத்தைக்
கூற நினைக்கையில்..
இப்படி
ஒரு கணமேனும்
அல்லது ஒரு நொடியேனும்
நாம் வார்த்தைகளைத்
தேடி தோல்வியுற்றதுண்டு!

ஜன்னலின் வழியே!

என்னுள் சுருங்கி
அறையின் ஒரு மூலையில்
நான் முடங்கி கிடக்கையில்
வெளியே விசாலமாய்
தன் கைகளை விரித்து
அழைத்திடும் வானத்தினைக்
கண்டேன் ஜன்னலின் வழியே!

Friday 17 February 2012

இதயமா? வெறும் இயந்திரமா?

வாழ்வினைத் தொலைத்து விட்டு
வானம் நோக்கி பயணம் போகும்
இயந்திர வாழ்வினில்
நானும் ஓர் அங்கமா?
உலகம் என்ற பிரபஞ்சம்
தன்னுள் சுருங்கி
நான் என்ற ஒற்றைச் சொல்லில்
முடிந்து விடுகின்றது
இந்த கலியுக வாழ்க்கை.
ஒடிந்து விடும் நிலையில்
உறவுகள் மெலிந்து விடுகின்றன.
இதயம் வெறும் இயந்திரமான
வேளையில்
ஊதாரித்தனமாக உணர்வுகளை
செலவழிக்க பலர் விரும்புவதில்லை..
மனிதன் மரக்கட்டையான நொடியில்
வெண்ணிலவு வெறும் வேற்று கிரகமாயிற்று!
தவறாய் உரைத்து விட்டேனா?
மரக்கட்டைக்குக் கூட கொஞ்சம்
உணர்வு உண்டோ?

தொற்றிக் கொள்ளும் சில நினைவுகளும் உணர்வுகளும்..

என்றோ, எப்பொழுதோ,
ஏதோ ஓர் உணர்வில்
எழுதிய கவிதை
இன்று
கையில் கிடைத்தது
கசங்கிய நிலையில்!
செல்லரித்த புகைப்படங்களில்
வாழும் நினைவுகளைப் போலவே
கசங்கிக் கிடந்த காகிதத்தின் ஓரத்தில்
ஒட்டிக் கொண்டு இருந்தது
என் உணர்வுகளும்..

காதலின் சுவடுகள்.

உன்னுடன் இணைந்து நடக்கையில்
என் சுவடுகள் சொர்க்கத்தில்
பதிகின்றன.


உன்னுடன் கதைக்கையில்
என் கால நேரம் சுருங்கி
விடுகின்றது!


உன் சிரிப்பினில்
நான் மலர்கின்றேன்.
உன் கண்ணீரில்
நான் கரைகின்றேன்.


ஒரு கோடி பெண்களைப்
பார்த்தும் சலனம் இல்லாமல்
சுவாசிக்கின்றேன்!
புகைப்படம் என்றாலும்
உன் முகம் பார்க்கையில்
சேமித்து வைத்த என்னை
செலவழித்து விடுகிறேன்!


உன் நினைவுகளில் தொலைகின்றேன்.
உன் கனவுகளில் கொஞ்சம் கலைந்து போகின்றேன்.

காணா பொழுதுகளில் கவிஞன் ஆகின்றேன்.
காணும் நொடிகளில் ஓவியன் ஆகின்றேன்.
உன் பார்வைகளில் என்னை காண்கிறேன்.

பெண்ணே,
வாழ்ந்து விட்டு மடிகின்றேனே,
உன் உயிரில்
ஒரு துளியாய் சிந்தி
தேங்கி நின்று
அதன் ஈரம் உன்னை நனைத்துக் கொண்டே
இருக்கும் படி
உன்னுடன் ஒரு வாழ்க்கை
வாழ்ந்து விட்டு மடிகின்றேனே!


உன் மீதான என் காதல்!

உன் பார்வைகளில், உன் தொடுதல்களில்
உன் அணைப்பினில், உன் முத்தங்களில்
உன் கோபத்தினில், உன் முகச்சுளிப்பினில்
உன் தோள்களில், உன் வெறுப்பினில்
உன் அலட்சியத்தினில், உன் குறைகளில்
உன் நிறைகளில், உன் புன்னகையில்
இப்படி உன்னுடன்
எத்தனை வருடம் கழிந்தாலும்
தீரமலே இருக்கின்றது என் காதல்!
தினம் விடியும் விடியலைப் போன்று
புத்தம் புதிதாகவே மலர்கின்றது
உன் மீதான என் காதல்!

Wednesday 15 February 2012

கண்ணோடு சில கனவுகள்..


கண்ணோடு சில கனவுகள்..
கைக்கு எட்டா தூரம் என்றபோதும்
அனைவரின் மனதோடும்
நொடிக்கொரு முறை
எட்டிப் பார்க்கின்றன
சில கனவுகள்.
வானவில்லின் வர்ணங்களைப்
பார்த்து விட ஏங்கும்
கண்பார்வையற்றோரின் கண்ணோடு
விழித்திருக்கும் கனவுகள்.
தன் மழலையின் மொழியினை
சில நொடியேனும் கேட்டு விடத்
துடிக்கும் தாயின் செவிகளில்
சத்தமாக ஒலித்துக் கொண்டே
இருக்கும் கனவொன்று!
தான் காதலிக்கும் பெண்ணின் காதோடு
" I Love You"
சொல்லி விட மருகும்
வாய் பேச இயலாத
காதலனின் உதடுகளில்
உரைத்துக் கொண்டே இருக்கும்
காதல் கனவுகள் பல..
இப்படி நாம் அலட்சியப்படுத்தும்
நிஜங்கள் பல
சிலர் ஏங்கித் தவிக்கும்
வெறும் கானல் கனவுகள்.

Thursday 2 February 2012

சில உணர்வுகள்...

சில உணர்வுகள் உணரும் வரை
புரிந்து கொள்ள முடியாது.
சில உணர்வுகள் புரிந்த போதிலும்
உணர முடியாது.
தாய்மையும் காதலும் மட்டுமே
உணர்ந்த போதிலும்
புரிந்து கொள்ள முடியாது.

புரிதல் என்பது...

விரிசல்களுக்கு இடையில்
தேங்கி கிடக்கின்றது காதல் துளிகள்..
மேலோங்கி காதல் வழிந்திடும் நொடியில்
மறைந்தே போகும் இடைவெளிகள்..
புரிதல் என்பது சில வேளைகளில்
மேலோங்கி பெருகிடும் காதலே!

புரிதல் என்பது...

ஓராயிரம் வார்த்தைகள் கோர்த்து
பல நிமிடங்களைத் தொலைத்து
கூற வந்த வாக்கியங்கள்
ஊனமாகி பின் மறைந்து போகையில்
தேங்கி கிடந்த கண்ணீரில்
என்னை தேக்கி வைக்க
மெருதுவாய் என் கன்னம் வருடி
உன் விரல்களை என் விரல்களின் மேல்
வைத்து நீ பார்த்த
அந்த பார்வையில்
வழிந்தோடிய கண்ணீர்த்துளிகளில்
நானும் கொஞ்சம் சிந்தி நின்றேன்.
புரிதல் என்பது வார்த்தைகளில் இல்லை.
உணரும் உள்ளந்தனில் நிரம்பி கிடக்கு.

Wednesday 1 February 2012

வாழ்க்கை மிச்சம் இருக்கு..


வாழ்க்கை மிச்சம் இருக்கு..
வாழ்ந்து பார்க்க
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு!!!!

படுக்கை தனில் மல்லாந்து
படுத்து கொண்டு
மரணத்தை சுழலும் காற்றாடியின்
அருகில் வைத்து கொண்டு இருக்கும்
தாத்தாவுக்கு பேரக்குழந்தையின் பிஞ்சு
கரங்களில்
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு....

வறுமையின் பிடியில் சுரக்க மறுத்தாலும்
தன் மார்ப்போடு அணைத்து
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கையில்
ஓர் ஏழைத் தாய்க்கு
வாழ்ந்து பார்க்க
வாழ்க்கை இன்னும்
கொஞ்சம் மிச்சம் இருக்கு!!!!

கழுத்தை நெரித்திடும்
கடன் தொல்லையில்
வீட்டை விற்று விட்டு
வெளியேறும் பொழுதினில்
தன்னோடு வாலை ஆட்டிக் கொண்டு
தெருவோரம் நிற்கும்
நாய்க்குட்டியைப் பார்க்கையில்
கடனாளி ஒருவனுக்கு
வாழ்வதற்கு இன்னும்
வாழ்க்கை மிச்சம் இருக்கு!!!

எனக்கும் உனக்கும்
8 நாளில் மடிய போகும்
பட்டாம்பூச்சிக்கும்
வாழ்ந்து பார்க்க வாழ்க்கை
இன்னும் மிச்சம் இருக்கு....

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்!


பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

நடையிழந்த ஓவியம்
மூலையில் முடங்கிக் கிடக்காமல்..
மூச்சு முட்டி
கைகளில் நடைபயின்று...
துள்ளிக் குதித்தோடும்
காட்சிதனைப் பார்க்கையில்

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

ஐம்புலன்களும் அம்சமாய் அமைந்து...
ஆறறிவும் அழகாய் நிறைந்து..
வாழ்க்கைப் போராட்டங்களில்
நம்பிக்கை இழந்த மானிடனுக்குச்
சிறகொடிந்த பட்டாம்பூச்சி ஒன்று
புன்னகை அணிந்து..
கைகளில் முட்களை ஒடித்து...
பாடம் கற்பிக்கும்
காட்சிதனைப் பார்க்கையில்

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

கால்களின் மேல்
நம்பிக்கை வைக்காமல்...
வாழ்க்கையின் மேல்
விதியைத் திணிக்காமல்...
பெற்றோரின் மேல்
சுமையை ஏற்றாமல்...
இறைவனின் மேல்
பழியைச் சுமத்தாமல்...

வாழ்வின் தத்துவம் உணர்ந்து...
தன்னம்பிக்கயின் ஊன்றுகோல் பிடித்து...
புன்னகையை இதழோடு நிறைத்து...
தத்தித் தத்திச் செல்லும்
இந்த காட்சிதனைக் காண்கையில்
மானிடம் ஏங்கிக் கிடக்கிறது
இவளின் தன்னம்பிக்கையை வேண்டி...

சின்னஞ்சிறு நட்சத்திரமே...
எங்களின் பாதங்களை
உன் தன்னம்பிக்கைக்குத்
தானம் செய்கிறோம்...
இனி
என்றென்றும் தளராமல்
"எங்களின் கால்கள்"

வந்து விடவா விண்மீனே?

தூரமாய் அந்த சின்னஞ்சிறு நட்சத்திரம்
கண் சிமிட்டி கூப்பிடுது என்னை.
வந்து விடவா விண்மீனே?
நிலவொளியில் கண்ணாமூச்சி ஆடுவோம்
களைத்துப் போகையில் முகில்களை
அள்ளி எடுத்து முகம் துடைத்துக் கொள்வோம்.
உலகம் தன்னை மறந்து
விழி மூடி உன் மடியினில்
கொஞ்சம் துயில் கொள்ள
வந்து விடவா விண்மீனே?

கனவே உன்னோடு...

சின்ன சின்ன சிணுங்கல்கள்
அதனுள் வழிந்திடும் குறும்புகள்
சின்ன சின்ன மோதல்கள்
அதனுள் நிரம்பி கிடக்கும் காதல்..
சின்ன சின்ன பார்வைகள்
அதனுள் ஊடுருவிடும் மின்சாரங்கள்..

வாழ்வின் நிதர்சனத்தில்
திக்கித் திணறினாலும்
காதலின் கனவுகளில்
அவப்பொழுது என்னை நானே
மீட்டுக் கொள்கிறேன்.