Saturday 18 August 2012

அலட்சியங்களுக்குள் சிக்குண்டு கிடக்கும் சில கனவுகள்!

கண்ணோடு சில கனவுகள்..
கைக்கு எட்டா தூரம் என்றபோதும்
அனைவரின் மனதோடும்
நொடிக்கொரு முறை
எட்டிப் பார்க்கின்றன....
 
சில கனவுகள்.
வானவில்லின் வர்ணங்களைப்
பார்த்து விட ஏங்கும்
கண்பார்வையற்றோரின் கண்ணோடு
விழித்திருக்கும் கனவுகள்.
தன் மழலையின் மொழியினை
சில நொடியேனும் கேட்டு விடத்
துடிக்கும் தாயின் செவிகளில்
சத்தமாக ஒலித்துக் கொண்டே
இருக்கும் கனவொன்று!
தன் காதலிக்கும் பெண்ணின் காதோடு
"I Love You "
சொல்லி விட மருகும்
காதலனின் உதடுகளில்
உரைத்துக் கொண்டே இருக்கும்
காதல் கனவுகள் பல..
இப்படி நாம் அலட்சியப்படுத்தும்
நிஜங்கள் பல
சிலர் ஏங்கித் தவிக்கும்
வெறும் கானல் கனவுகள்!!

பிரிவு!

பிரிவின் காயம் கண்ணீர்துளிகளை
மட்டுமே பங்கு போட்டுக் கொள்கின்றது...
சிந்தி சிந்தி பின் களைத்துப் போய்
இல்லையென்றானதை இயலாமையோடு
ஏற்றுக் கொள்ளும் பொழுதினில்....
கண்ணீர்துளிகளைக் கசிந்து
காயத்தோடு மீண்டும்
இயல்புக்குத் திரும்பி விடுகின்றது
இந்த மனது!!!

Sunday 12 August 2012

கானல் நீர் தாகம் தீர்ப்பதில்லை!




திசை மாறிப்போன வாழ்க்கையில் உடைந்து சுக்கு நூறாகி கிடக்கும் இளம் பிராயத்து கனவுகளின் துகள்களை ஒட்டி வைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றோம் மனதின் ஒரு மூலையில். அவப்பொழுது விரிசல்களுக்கிடையில் கிடக்கும் கனவுகள் கீறி விடுகின்றன மனதையும் கண்ணீரையும். சாத்தியமான கனவுகள் கை நழுவி புதையுண்டு போகையில் கூடவே புதைந்து, மூச்சு கொஞ்சம் முட்டி, மீண்டும் உயிர் பிழைத்து எழுந்து விடுகிறோம். இருந்தும் சில பக்கவிளைவுகளுக்கு ஆளாகி விடுகின்றது பாழாய்ப் போன மனது!

இப்படி சில கல்லறையாகிப் போன கனவுகள் எனக்குள்ளும் உண்டு! என்னை மீட்டு எடுத்தது இரண்டு வாரங்களுக்கு முன் நிகழ்ந்த மிகச்சாதாரணமான வாகன நெரிசல் ஒன்று! வேலை முடிந்து வாகனத்தைக் கழுவ எடுத்துச் சென்றேன். கழுவி முடிக்கப்பட்ட நேரம் சரியாக மாலை மணி 6.10. நோன்பு துறக்கும் நேரம் என்பதால் வாகன நெரிசல் அதிகரித்திருந்தது! வாகனம் கழுவும் இடத்திலிருந்து நான் வசிக்கும் அப்பார்ட்மெண்டிற்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. நேர்பாதையில் 20 நிமிடங்களைச் செலவழித்த பின் இன்னொரு பாதையில் நுழைந்து சென்று விட எத்தனித்தேன். அந்த முடிவை நான் எடுக்கையில் மற்றொரு பாதையில் நிலவரம் நான் அறியேன். சட்டென முடிவெடுத்து அந்த பாதையில் நுழைந்து ஒரு 7கிலோ மீட்டர் சென்றிருப்பேன். அங்கே நான் கண்ட காட்சி, நீண்ட வரிசையில் வாகனங்கள் அசைவற்றுக் கிடந்தன! நானும் இணைந்து கொண்டேன். அங்கிருந்து நான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டிற்கு வெறும் 10 நிமிடங்கள்தான்! ஆனால், நான் குறைந்தது 1 மணி நேரம் 20 நிமிடங்கள் கழித்துதான் வீடு சென்றடைந்தேன்! இந்த பாதையைத் தேர்ந்தெடுக்காமல் நேர்பாதையிலேயே சென்றிருக்கலாம் என்று எப்பொழுதும் போல் என்னைத் திட்டிக் கொண்டேன்! ஒரு மணி நேரம் கழித்து எனது தோழி ஒருத்தி என்னைத் தொலைபேசியில் அழைத்தாள்.  நான் தவிர்த்த பாதையில் 2 மணி நேரம் காத்திருந்து அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்ததாகச் சொன்னாள். அந்த பாதையில் சிறு விபத்து ஒன்று நடந்ததால் வாகன நெரிசல் மோசமடைந்ததாக அவள் கூறினாள்!! மெளனம் என்னை ஆக்ரமித்தது! சில உண்மைகள் மெல்ல உரைத்தது!

நாம் கடந்து வந்த பாதைகளைப் பற்றி நமக்குத் தெரியும்!! செல்லாத பாதைகள் சுமந்து நிற்கும் சுமைகளை நம்மால் எப்படி யூகிக்க முடியும்? ஒரு வேளை அந்த பாதையில் நாம் சென்றிருந்தால் நாம் வருத்தப்பட்டிருக்கக்கூடும்! நிறைவேறாமல் போன ஆசைகளும் கனவுகளும் அப்படித்தான். நம்முடைய ஆசைகள் நிறைவேறுகையில் அவை நாம் விரும்பிய ஆசைகளாகத்தான் இருந்திருக்கும் என்பதை யார் உறுதி செய்ய முடியும்? நாம் கடந்து வந்திருக்கும் பாதை மட்டுமே நிதர்சனம்! மருத்துவராக வேண்டும் என ஆசை கொண்டு கடினப்பட்டு படித்து மருத்துவராகிய பின் அதன் சுமைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஒரு மருத்துவரைப் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன்! அன்றைய ஆசை இன்றைய சுமை அவருக்கு!

விதியில் நம்பிக்கை இல்லை எனக்கு! ஆனால், நிகழும் சம்பவங்களில் நம்பிக்கை உண்டு! நாம் கடந்து வந்திருக்கும் பாதை மட்டுமே நிதர்சனம்! அதன் வலியும் வரமும் நாம் உணர்ந்த ஒன்று! நிராசையான ஆசைகள் வெறும் நிழல்கள் மட்டுமே! நிஜங்களோடு வாழ்வோம் நிழல்களில் இளைப்பாறி மட்டும் கொள்வோம்!

ஏனெனில், கானல் நீர் தாகம் தீர்ப்பதில்லை!



Wednesday 1 August 2012

நடுங்கிடும் விரல்கள் கொடுக்கும் தினம் ஒரு கொட்டு!

அந்த பெரியவருக்கு வயது குறைந்தது 65 இருக்கும். நான் வசிக்கும் அப்பார்மெண்ட் சாலையைப் பெருக்குபவர். நான் வேலைக்குச் செல்லும் வேளையில் தவறாமல் அவரைப் பார்ப்பேன். மெலிந்த உடல். கனிவான முகம். என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மெல்லிய புன்னகை உதிப்பார்.

காலை நேர சோம்பல் அன்றைய பொழுதைச் சலிப்படைய செய்யும் பொழுதெல்லாம் ஓங்கி தலையில் அடித்தது போல் இருக்கும்- அந்த பெரியவர் நேர்த்தியாய் சாலையைப் பெருக்கும் காட்சி :-)

வாழ்க்கை தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வாழ்ந்திட :-)
 

அந்த கைப்பிடிக்குள்...


அவருக்குக் கண்பார்வை இல்லை. வீடு திரும்பும் வேளைகளில் அவரை அடிக்கடி பார்ப்பேன். முடிந்த மட்டிலும் அவருக்கு உதவி செய்வேன். ஒரு நாள் பிரச்சனை ஒன்றின் இடுக்கினில் சிக்குண்டு எனது தன்னம்பிக்கையை இழந்து கொண்டிருந்த தருணத்தில் அவரைக் கண்டேன். கைப்பிடியுடன் தடுமாற்றமில்லாமல் அவர் தனது பாதைதனில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் ஓடிச் சென்று அவரின் கையைப் பிடித்து அவரை அழைத்துச் சென்றேன். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் தான் தினமும் கோலாலம்பூரிலிருந்து ஷா அலாமிற்குப் பேருந்தில் பயணம் செய்து வேலைக்குப் போவதாகச் சொன்னார். அதிர்ச்சிக்குள்ளானேன்.

அவருடன் நான் செலவழித்தது வெறும் 6-7 நிமிடங்கள் மட்டுமே! அந்த நிமிடங்கள் எனக்கு அளித்த தைரியத்தை எந்த தன்முனைப்புச் சொற்ப்பொழிவாலும் தந்திருக்க முடியாது! பாதை கடக்க முயற்சிக்கையில் அருகில் உள்ளவரின் கையைப் பிடித்து கடக்கும் பொழுதினில் ஏற்படும் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது எனக்கு அவரின் கைப்பிடியில்! யார் சொன்னது? விழிகளில் பார்வை உண்டென்று. அது மனதின் உறுதியில் இருக்கு. அன்று பாதையைக் கடக்க உதவியது நானல்ல. அவர்தான்!
 
மாற்றுத்திறனாளிகளைப் பார்த்துப் பரிதாபப்படும் அளவிற்கு நாம் முழுமையடைந்திருக்கவில்லை என்பது புரிந்தது எனக்கு!

எனது டைரி இன்று எனக்கு போதி மரம்!



அலுவலக கோப்பு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கையில் எனது பழைய டைரிகள் மூன்று கண்ணில் தென்பட்டது. கடந்த காலத்தை அசைபோடுவதில் எப்பொழுதுமே ஓர் அலாதி இன்பம்தான். தேடிக்கொண்டிருந்த கோப்பை மறந்து விட்டு டைரியில் மூழ்கினேன். எனக்குக் கிடைத்த அடிமை உண்மையிலேயே மிகவும் திறமைசாலிதான். அது வேறு யாரும் இல்லை. என் செல்லக்குட்டி விநாயகன் தான். ஏனெனில், அவனைத் திட்டியோ அல்லது அவனுக்கு நன்றி சொல்லியோ தான் தொடங்கி இருக்கின்றேன் ஒவ்வொரு பதிவையும் ;-)

என்னுடைய மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால் என்னால் எனது உணர்வுகளை வாய்மொழி வார்த்தையாய் கூற இயலாது. எழுதுகையில் என்னை அறியாமல் ஆத்மார்த்தமாய் எழுதி விடுவேன். எனது உணர்வின் ஆழம் உணர வேண்டுமென்றால் ஒன்று நான் எழுதுவதைப் படிக்க வேண்டும்; இல்லையேல் எனது கண்ணீரை அல்லது மெளனத்தை மொழிபெயர்த்துக் கொள்ள் வேண்டும்!

உணர்வுகளின் சுழற்சியில் வார்த்தைகள் அழுத்தமாகவே பதிந்திருந்தன. சில கண்ணீர்துளிகளின் ஈரம் இன்னும் எனது எழுத்துக்களில் ஒட்டிக் கொண்டிருந்தது! இன்பத்தின் ஆழத்திற்குள் சில சொற்கள் இன்னும் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. அன்றைய நிலையில் என் வாழ்வின் மிகக் கொடூரமான நிமிடங்கள் என்று நான் கருதிய நிகழ்வுகள் இதோ, இன்று வெறும் நினைவுகளாய் மட்டும் கிடக்கின்றன சில பக்கங்களில்! மீண்டு வந்துதான் விட்டேன் நான்! மீள முடியா காயம் என்று எதுவுமில்லை. நம் வரம்புக்கு மீறிய பிரச்சனைகளும் எதுவுமில்லை! நேற்று என்பதே வெறும் நினைவாகும்பொழுது அதன் காயங்கள் மட்டும் காய்ந்து விடாதா என்ன? டைரியை மூடுகையில் கொஞ்சம் உரைத்தது எனக்கு! கடந்த காலத்தின் பக்கம் நாம் திறவாமல் திறக்காது என்பது!!

எனது டைரி இன்று எனக்கு போதி மரம்!

நினைவுகள் என்பது...



இந்த மனித வாழ்வின் மிச்சம் வெறும் நினைவுகள் மட்டுமே! எலும்புக்கூடாகி கிடக்கும் மனிதர் ஒருவர் வாழ்வது நினைவுகளில் மட்டுமே. இந்த நினைவுகளுக்குத்தான் எவ்வளவு வலிமை? வதைக்கவும் செய்கின்றது; நம்மை வாழவும் வைக்கின்றது. நினைவுகள் என்பதுதான் என்ன? மகிழ்ந்து திளைத்திருக்கையில் உள்ளந்தனில் பெருக்கெடுத்து ஓடும் இன்பம்தான் நினைவுகளோ? எனது பார்வையில் நினைவுகள் கண்ணீரின் ஈரத்தில் கூட எழுதப்படலாம். கரைதனை தொட்டு...
தொட்டுச் செல்லும் கடல் அலைகளின் ஈரத்தில் நனைந்திருக்கின்றது கரையின் அழகிய நினைவுகள்! ஆத்மார்த்தமான உணர்வில் உண்மையான அன்பில் நகரும் ஒவ்வொரு நொடியும் நம் இதயக்கூட்டில் சேமிக்கப்படும் நினைவுகளே. தாயிடம் அடி வாங்கி அழுத கணங்கள் இன்று நாம் நினைத்து மகிழ்ந்திடும் நினைவுகளாய் இல்லையா? அன்றைய கண்ணீர்துளிகளின் ஈரத்தில் நிறைந்திருக்கின்றது இன்றைய அழகிய நினைவுகள்!

நினைவுகள் என்பது இன்பத்தின் எல்லையில் சேகரிக்கப்படுவது அல்ல. மனதின் ஆழ்நிலை உணர்வில் கோர்க்கப்படுவது!

நாய்க்குட்டி போதும்!

புதைகுழியின் கடைசி அடிக்கு நாம் விழுந்து கொண்டிருக்கையில், உதவிக்கு நீட்டப்படும் கைகள் அனைத்தும் நம்மை மீட்டு விடுவதில்லை. ஏனோ ஒரு சிலரால் மட்டுமே நம்பிக்கை கொடுக்க முடிகின்றது காயம் பட்ட மனதிற்கு! எல்லோர் வாழ்விலும் அந்த தற்கொலை நிமிடங்கள் இருக்கத்தான் செய்கின்றது, குறைந்தபட்சம் மனதளவில்!! வாழ்ந்து விடுவது சிரமமில்லை; ஆனால், விழுந்ததும் எழுவதில்தான் கொஞ்சம் உறுதியும் மனோதிடமும் தேவைப்படுகின்றது!

கடந்து வந்த பாதையில் என்னுடன் நடந்து வந்த கதைமாந்தர்கள் நிறையவே இருக்கின்றனர். என்னுடன் பயணம் முடிந்து பாதை விலகி சென்றவர்கள் ஆயிரமாயிரம். சில தூர அடிகளில் தங்களின் சுவடுகளை அழுந்த பதித்தவர்களும் உண்டு! பல நூறு மையில் கடந்த போதும் நினைவை விட்டுத் தவறிப் போன காலடித்தடங்களும் உண்டு. மனிதர்கள் தவறிப்போன நினைவுத்தடங்களை வீட்டில் வாழ்ந்த செல்லப்பிராணிகள் நிரப்பி இருப்பது வியக்கத்தக்கது! தனது பசி தீர்த்த ஒரு ரொட்டித்துண்டிற்காக வாழ்நாள் முழுதும் நன்றி மறவா நாய்க்குட்டிகளுக்கு மத்தியில் தாழ்ந்து போன மனிதரும் உண்டு என் வாழ்வின் வரலாற்று பதிவுகளில்!! வரலாறு முக்கியம்தான். உலகின் வரலாறு அல்ல; தனித்திருக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும் நமது வரலாறு கற்றுக் கொடுக்கும் வாழ்வின் நிதர்சனத்தை!


இன்று நான் கற்றுக் கொண்ட நிதர்சனம்: துவண்டு கிடக்கும் மனதை மீட்க சில சமயங்களில் நமது காலடியைத் தொட்டவண்ணம் அமர்ந்திருக்கும் நாய்க்குட்டி போதும்!