Monday 21 November 2016

காதல் சாபவிமோசனம்!

தாங்கொண்ணா வலி மிகுதியில்
உறைந்து போன கண்ணீர்துளிகள்
உறுத்துகின்றன இதயத்தை உரசியபடி...
காதல் சாபம்;
பிரிதலே வரமென்று
நாம் முடிவெடுத்த நொடி
சுப முகூர்த்தமா?
குறித்திட எந்த ஜோசியரிடமும்
பஞ்சாங்கம் இல்லை!
மிச்சம் மீதியாய் சில நினைவுகள்
எச்சம் மிகுதியாய் சில முத்தங்கள்
கசக்க கசக்க காதல் செய்கிறோம்
மண விலக்கு வளாகத்தில்!
சுற்றம் சூழ இணைந்த கரங்கள்
குற்றம் காணும் விழிகளுக்கு மத்தியில்
கையொப்பமிடும் அதே கரங்கள்!
என்னவோ!
காதலிக்க மெனக்கெட்டதைக் காட்டிலும்
காதலை முறிக்க
அவ்வளவு அலையவில்லை!

இனி
காலை நேர முத்தத்திற்கு
அடம் பிடிக்கும்
நெற்றிப் பொட்டிடம்
விளக்கி புரிய வைக்க வேண்டும்
பிரிதலின் நிதர்சனத்தை!

Sunday 6 November 2016

சரியான பிழை நான்!
சொர்க்கத்தில் ஒரு நரகம் நான்!
தேவதைகளின் சாபம் நான்!
அரக்கன் அளிக்கும் வரமும் நான்!
மயங்கி விடாதே!
கழுத்தை நெறிக்கும் வல்லமை கொண்டவள்!
திமிறி ஓடாதே!...
போதை ஏற்றும் கவிதை சொல்பவள்!
ஆம்,
பிழையான சரி நான்!
சிறகு முளைத்த கவிதை நான்!
ஒரு போதும்
உன் வார்த்தை சிறைதனில்
சிக்க மாட்டேன்!

மீண்டும் முதலிலிருந்து?

மெளனங்களில் மெல்ல மெல்ல‌
உறையும் என் உணர்வுகள்...
ஓர் இரவின் நீட்சியில்
தீர்ந்து போன‌
கண்ணீர்துளிகளின் கறைதனில்
புனிதம் கொண்டன‌
நீ கீறிச் சென்ற ரணங்கள்...
நிதம் முத்தம் தேடும்
நெற்றிப் பொட்டில்
காயம் இட்டுக் கொண்டேன்!
வலி போக்கவும்
உன் முத்தம் கேட்கின்றது
என் செய்வேன் நான்?
இருந்தும் வதம் செய்தாய்!
பிரிந்தும் வதைக்கின்றாய்!
இது கள்ளாட்டமென கருதி
மீண்டும் முதலிலிருந்து?