Tuesday 22 May 2012

எனது கவிதை..

எனது கவிதை
யாரோ ஒருவருக்குப் பிடித்து விடுகின்றது.
எங்கோ எவரையோ குழப்பி விடுகின்றது..
ஏனோ சிலருக்கு எரிச்சலூட்டுகின்றது..
பலரால் அலட்சியப்படுத்தப்படுகின்றது..
மறுக்கப்பட்டிருக்கு வெறுக்கப்பட்டிருக்கு
எது எப்படி இருப்பினும்
எனது கவிதை
தன் தன்மை இழக்காமல்
வாழ்கின்றது
என்னைப் போன்றே :-)

Sunday 13 May 2012

மழலையின் புன்னகை போதும்!!

எதுகை மோனை வேண்டாம்;
என் உணர்வைச் சொல்ல
சில வார்த்தைகள் போதும்.
இலக்கணங்கள் வேண்டாம்;
என் மெளனத்தை விளக்கும்
மொழி ஒன்று போதும்.
நயம் மிகுந்த கவிதைகள் வேண்டாம்;
என் கண்ணீரை மொழிபெயர்க்கும்
சொற்கள் போதும்!!!
இது எதுவும் சாத்தியம் இல்லை எனில்
எனக்கு மழலையின் புன்னகை போதும்!

Thursday 10 May 2012

மன்னிக்க வேண்டும் மகாகவி!!

"ஜாதிகள் இல்லையடி பாப்பா"
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
உங்களின் இந்த விதிக்கு
விலக்கு உண்டு!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!

சின்னஞ்சிரு கிளி அவள்
சித்திரப் பதுமை சிலை!!
பிரபஞ்சம் சுருங்கி போகும்
அவள் பிஞ்சு விரல்தனில்!!
இரண்டொரு பற்கள் என்றாலும்
அவள் சிரிக்கையில்
இதயம் நிறைந்து போகும்!!
2 வயது பெண்தேவதை அவள்!!

நான் கண்டது அவளை
ஓர் அன்பு இல்லத்தில்!!
நேர்முகமாய் காண இயலவில்லை
அவளால்!!!
தலை சாய்த்து கண்சிமிட்டி
கொஞ்சும் புன்னகையில்
வலம் வர வேண்டிய தேவதை
தலை சாய்ந்த படியே
கழிக்க வேண்டும் தன் வாழ்நாளை!
தலையிலிருந்து கன்னம் வரை
நீண்டு வடு ஒன்று!!
காயத்தின் காரணம் கேட்டேன்!
ஒரு நொடியில் உயிரை இழந்தேன்!!

இரவு நேர பசிக்கு
குழந்தை அவள்
அழுத காரணத்திற்காக
சுவற்றில் எறியப்பட்டாள்!
எறியப்பட்ட கணம் எப்படி
துடித்திருப்பாளோ இறைவா!!
எறிந்தவன் எவனுமில்லை
தந்தை என்ற முகமூடிக்குள்
ஒரு ராட்ஷசன்!!!

அவன் தீண்டதகாதவன்!!!
அவன் ஒரு கீழ்ஜாதி மனிதன்!!!
மிருகமென ஒப்பிட்டு
மிருக இனத்தைக் ஈனப்படுத்தாதீர்!!
பூவொன்றை சிதைத்த
அவனைக் கொசுக் கூட அண்டாது!
ஏனெனில்,
அவன் உதிரம் தீண்டதகாதது!!
எனவே,
மன்னிக்க வேண்டும் மகாகவி!!
கீழ்ஜாதி என்ற ஒன்று
உண்டு இப்புவிதனில்!!
"இது கற்பனையல்ல நிஜம்!!!"

Friday 4 May 2012

வெண்ணிலவு!!

வெள்ளை வான்முகில்களுக்கு
மத்தியில் அழகாய் காட்சியளிக்கிறது
வெண்ணிலவு!!
இன்று
நிறைய கவிதையும் காதலும் பிறந்திருக்கலாம்

இரவு!

இரவு கவிதைக்குள் ஓர் ஓவியம்;
ஓவியத்திற்குள் ஒரு கவிதை...
தினந்தோறும் ரசித்த போதும்
திகட்டவில்லை; சலித்துப் போகவும் இல்லை.
இரவு நேரத்தில்
பிடித்த பாடல்களைக் கேட்கையில்
இன்னும் பிடித்துப் போகிறது
அந்த நிலவும் இந்த இரவும்...

ஒற்றை வெண்ணிலவு!

மொத்த பகலையும்
வென்று விடுகிறதே
இந்த ஒற்றை வெண்ணிலவு!

நிலா, நட்சத்திர இரவு!

இரவில் தூங்க வேண்டும்
என நியதியைப் படைத்தவன்
நிலவையும் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும்
பாராமல் இருந்திருப்பான்!

கற்புக்கரசி...


அடர்ந்த இருள் முற்றிலும்
சூழ்ந்திருந்த போதும்
தன் ஓளியால் இருட்டினை
நெருங்க விடாமல்
கற்பு காக்கும் வெண்ணிலவே!
 உன்னில் கறையைக்
கண்டுபிடித்தவன் யார்?
அவன் ராமன் வம்சத்தைச்
சேர்ந்தவனாய் இருப்பான்!

Wednesday 2 May 2012

நிறுத்திக் கொள்!

தேங்கி கிடக்கும்
உன் நினைவுகளில்
நான் மூழ்கி
மூச்சடைத்துப் போகும் முன்
நினைவுகள் தருவதை நிறுத்திக் கொள்!

உடைக்க முயலாதீர்கள்!!

சில மெளனங்களை உடைக்க முயலாதீர்கள்.
ஏனெனில்,
உடைந்து வெளிவரும்
வார்த்தைகளின் வலிமையைத்
தாங்க இயலாமல் போகலாம்.

மனிதன் என்ற சொல்

நடைபாதை ஓரத்தில் அண்டிக்கிடந்த
அந்த முதியவரின் மேல்
அப்பிக் கிடந்த அழுக்கில்
அழுக்கானது மனிதன் என்ற சொல்.

எவருமில்லை!!!

விசித்திர பார்வைகள் என் மேல் விழுகின்றன.
கேள்விக்குறிகளும் வீசப்படுகின்றன..
எந்த சலனமும் இல்லாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
எனது உணவைக் குப்பைத் தொட்டிகளில்.
ஏனெனில்,
உணவை வீசக் கூட
இந்த கூட்டத்தில்
எவருமில்லை.

கவிதை

கவிதைகளுக்குள் ஓர் உலகம் உண்டு;
கவிதைகளைத் தாண்டி இன்னோர் உலகம் உண்டு!

Tuesday 1 May 2012

உன் சேலை அணைப்பினில்...

இந்த திருமண நாள்
உன் சேலையின்
அணைப்பினில் கழிகின்றது.
விவாதங்களுக்கு பின்
நான் பேசாமல்
இருந்த கணங்களை
சேமிக்க துடிக்கிறேன்
கூடுதலாய் சிலகணங்களை
உன்னுடன் வாழ்ந்திட.
என்றோ சேலை முந்தானையில்
ஒட்டிக் கொண்ட
மஞ்சள் கறையை
என் கண்ணீர் நனைத்ததடி.

சில கனவுகள்;சில நிஜங்கள்

கலைந்து போவதற்கென்றே சில கனவுகள்!
வலி கொடுப்பதற்கென்றே சில நிஜங்கள்.

அந்த ஒற்றை நாற்காலி


வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கும்
அந்த ஒற்றை நாற்காலி
எனக்கு போதிமரம்.
தனித்திருந்த நாட்களிலும்
சோகத்தின் பிடியில்
வெளுத்து போயிருந்த நாட்களிலும்
ஞானம் பெற்றேன் நான்
அதன் மேல் அமர்ந்த வண்ணம்.

பழைய டைரி!

பழைய டைரியில்
எழுத்துக்களில்லா பக்கம் ஒன்று.
உற்றுப் பார்த்தேன்
கண்ணீரின் கறை இருந்தது.
வார்த்தைகள் தோற்றுப் போன நாள் அது.