Monday 21 November 2016

காதல் சாபவிமோசனம்!

தாங்கொண்ணா வலி மிகுதியில்
உறைந்து போன கண்ணீர்துளிகள்
உறுத்துகின்றன இதயத்தை உரசியபடி...
காதல் சாபம்;
பிரிதலே வரமென்று
நாம் முடிவெடுத்த நொடி
சுப முகூர்த்தமா?
குறித்திட எந்த ஜோசியரிடமும்
பஞ்சாங்கம் இல்லை!
மிச்சம் மீதியாய் சில நினைவுகள்
எச்சம் மிகுதியாய் சில முத்தங்கள்
கசக்க கசக்க காதல் செய்கிறோம்
மண விலக்கு வளாகத்தில்!
சுற்றம் சூழ இணைந்த கரங்கள்
குற்றம் காணும் விழிகளுக்கு மத்தியில்
கையொப்பமிடும் அதே கரங்கள்!
என்னவோ!
காதலிக்க மெனக்கெட்டதைக் காட்டிலும்
காதலை முறிக்க
அவ்வளவு அலையவில்லை!

இனி
காலை நேர முத்தத்திற்கு
அடம் பிடிக்கும்
நெற்றிப் பொட்டிடம்
விளக்கி புரிய வைக்க வேண்டும்
பிரிதலின் நிதர்சனத்தை!

No comments:

Post a Comment