Wednesday 1 August 2012

எனது டைரி இன்று எனக்கு போதி மரம்!



அலுவலக கோப்பு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கையில் எனது பழைய டைரிகள் மூன்று கண்ணில் தென்பட்டது. கடந்த காலத்தை அசைபோடுவதில் எப்பொழுதுமே ஓர் அலாதி இன்பம்தான். தேடிக்கொண்டிருந்த கோப்பை மறந்து விட்டு டைரியில் மூழ்கினேன். எனக்குக் கிடைத்த அடிமை உண்மையிலேயே மிகவும் திறமைசாலிதான். அது வேறு யாரும் இல்லை. என் செல்லக்குட்டி விநாயகன் தான். ஏனெனில், அவனைத் திட்டியோ அல்லது அவனுக்கு நன்றி சொல்லியோ தான் தொடங்கி இருக்கின்றேன் ஒவ்வொரு பதிவையும் ;-)

என்னுடைய மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால் என்னால் எனது உணர்வுகளை வாய்மொழி வார்த்தையாய் கூற இயலாது. எழுதுகையில் என்னை அறியாமல் ஆத்மார்த்தமாய் எழுதி விடுவேன். எனது உணர்வின் ஆழம் உணர வேண்டுமென்றால் ஒன்று நான் எழுதுவதைப் படிக்க வேண்டும்; இல்லையேல் எனது கண்ணீரை அல்லது மெளனத்தை மொழிபெயர்த்துக் கொள்ள் வேண்டும்!

உணர்வுகளின் சுழற்சியில் வார்த்தைகள் அழுத்தமாகவே பதிந்திருந்தன. சில கண்ணீர்துளிகளின் ஈரம் இன்னும் எனது எழுத்துக்களில் ஒட்டிக் கொண்டிருந்தது! இன்பத்தின் ஆழத்திற்குள் சில சொற்கள் இன்னும் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. அன்றைய நிலையில் என் வாழ்வின் மிகக் கொடூரமான நிமிடங்கள் என்று நான் கருதிய நிகழ்வுகள் இதோ, இன்று வெறும் நினைவுகளாய் மட்டும் கிடக்கின்றன சில பக்கங்களில்! மீண்டு வந்துதான் விட்டேன் நான்! மீள முடியா காயம் என்று எதுவுமில்லை. நம் வரம்புக்கு மீறிய பிரச்சனைகளும் எதுவுமில்லை! நேற்று என்பதே வெறும் நினைவாகும்பொழுது அதன் காயங்கள் மட்டும் காய்ந்து விடாதா என்ன? டைரியை மூடுகையில் கொஞ்சம் உரைத்தது எனக்கு! கடந்த காலத்தின் பக்கம் நாம் திறவாமல் திறக்காது என்பது!!

எனது டைரி இன்று எனக்கு போதி மரம்!

3 comments:

  1. //எனது உணர்வின் ஆழம் உணர வேண்டுமென்றால் ஒன்று நான் எழுதுவதைப் படிக்க வேண்டும்; இல்லையேல் எனது கண்ணீரை அல்லது மெளனத்தை மொழிபெயர்த்துக் கொள்ள் வேண்டும்!//
    மீள் சிந்தனைக்கு தேவை இல்லாத, பொட்டில் அடித்து இதயத்தை நொறுக்கும் வரிகள் ;) உரைநடையிலும் கலக்கிறிங்க

    ReplyDelete
  2. you writing skill seriously awesome. keep it up..=)

    ReplyDelete