Sunday 12 August 2012

கானல் நீர் தாகம் தீர்ப்பதில்லை!




திசை மாறிப்போன வாழ்க்கையில் உடைந்து சுக்கு நூறாகி கிடக்கும் இளம் பிராயத்து கனவுகளின் துகள்களை ஒட்டி வைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றோம் மனதின் ஒரு மூலையில். அவப்பொழுது விரிசல்களுக்கிடையில் கிடக்கும் கனவுகள் கீறி விடுகின்றன மனதையும் கண்ணீரையும். சாத்தியமான கனவுகள் கை நழுவி புதையுண்டு போகையில் கூடவே புதைந்து, மூச்சு கொஞ்சம் முட்டி, மீண்டும் உயிர் பிழைத்து எழுந்து விடுகிறோம். இருந்தும் சில பக்கவிளைவுகளுக்கு ஆளாகி விடுகின்றது பாழாய்ப் போன மனது!

இப்படி சில கல்லறையாகிப் போன கனவுகள் எனக்குள்ளும் உண்டு! என்னை மீட்டு எடுத்தது இரண்டு வாரங்களுக்கு முன் நிகழ்ந்த மிகச்சாதாரணமான வாகன நெரிசல் ஒன்று! வேலை முடிந்து வாகனத்தைக் கழுவ எடுத்துச் சென்றேன். கழுவி முடிக்கப்பட்ட நேரம் சரியாக மாலை மணி 6.10. நோன்பு துறக்கும் நேரம் என்பதால் வாகன நெரிசல் அதிகரித்திருந்தது! வாகனம் கழுவும் இடத்திலிருந்து நான் வசிக்கும் அப்பார்ட்மெண்டிற்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. நேர்பாதையில் 20 நிமிடங்களைச் செலவழித்த பின் இன்னொரு பாதையில் நுழைந்து சென்று விட எத்தனித்தேன். அந்த முடிவை நான் எடுக்கையில் மற்றொரு பாதையில் நிலவரம் நான் அறியேன். சட்டென முடிவெடுத்து அந்த பாதையில் நுழைந்து ஒரு 7கிலோ மீட்டர் சென்றிருப்பேன். அங்கே நான் கண்ட காட்சி, நீண்ட வரிசையில் வாகனங்கள் அசைவற்றுக் கிடந்தன! நானும் இணைந்து கொண்டேன். அங்கிருந்து நான் வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டிற்கு வெறும் 10 நிமிடங்கள்தான்! ஆனால், நான் குறைந்தது 1 மணி நேரம் 20 நிமிடங்கள் கழித்துதான் வீடு சென்றடைந்தேன்! இந்த பாதையைத் தேர்ந்தெடுக்காமல் நேர்பாதையிலேயே சென்றிருக்கலாம் என்று எப்பொழுதும் போல் என்னைத் திட்டிக் கொண்டேன்! ஒரு மணி நேரம் கழித்து எனது தோழி ஒருத்தி என்னைத் தொலைபேசியில் அழைத்தாள்.  நான் தவிர்த்த பாதையில் 2 மணி நேரம் காத்திருந்து அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்ததாகச் சொன்னாள். அந்த பாதையில் சிறு விபத்து ஒன்று நடந்ததால் வாகன நெரிசல் மோசமடைந்ததாக அவள் கூறினாள்!! மெளனம் என்னை ஆக்ரமித்தது! சில உண்மைகள் மெல்ல உரைத்தது!

நாம் கடந்து வந்த பாதைகளைப் பற்றி நமக்குத் தெரியும்!! செல்லாத பாதைகள் சுமந்து நிற்கும் சுமைகளை நம்மால் எப்படி யூகிக்க முடியும்? ஒரு வேளை அந்த பாதையில் நாம் சென்றிருந்தால் நாம் வருத்தப்பட்டிருக்கக்கூடும்! நிறைவேறாமல் போன ஆசைகளும் கனவுகளும் அப்படித்தான். நம்முடைய ஆசைகள் நிறைவேறுகையில் அவை நாம் விரும்பிய ஆசைகளாகத்தான் இருந்திருக்கும் என்பதை யார் உறுதி செய்ய முடியும்? நாம் கடந்து வந்திருக்கும் பாதை மட்டுமே நிதர்சனம்! மருத்துவராக வேண்டும் என ஆசை கொண்டு கடினப்பட்டு படித்து மருத்துவராகிய பின் அதன் சுமைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஒரு மருத்துவரைப் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன்! அன்றைய ஆசை இன்றைய சுமை அவருக்கு!

விதியில் நம்பிக்கை இல்லை எனக்கு! ஆனால், நிகழும் சம்பவங்களில் நம்பிக்கை உண்டு! நாம் கடந்து வந்திருக்கும் பாதை மட்டுமே நிதர்சனம்! அதன் வலியும் வரமும் நாம் உணர்ந்த ஒன்று! நிராசையான ஆசைகள் வெறும் நிழல்கள் மட்டுமே! நிஜங்களோடு வாழ்வோம் நிழல்களில் இளைப்பாறி மட்டும் கொள்வோம்!

ஏனெனில், கானல் நீர் தாகம் தீர்ப்பதில்லை!



3 comments: