Wednesday, 1 August 2012

நினைவுகள் என்பது...



இந்த மனித வாழ்வின் மிச்சம் வெறும் நினைவுகள் மட்டுமே! எலும்புக்கூடாகி கிடக்கும் மனிதர் ஒருவர் வாழ்வது நினைவுகளில் மட்டுமே. இந்த நினைவுகளுக்குத்தான் எவ்வளவு வலிமை? வதைக்கவும் செய்கின்றது; நம்மை வாழவும் வைக்கின்றது. நினைவுகள் என்பதுதான் என்ன? மகிழ்ந்து திளைத்திருக்கையில் உள்ளந்தனில் பெருக்கெடுத்து ஓடும் இன்பம்தான் நினைவுகளோ? எனது பார்வையில் நினைவுகள் கண்ணீரின் ஈரத்தில் கூட எழுதப்படலாம். கரைதனை தொட்டு...
தொட்டுச் செல்லும் கடல் அலைகளின் ஈரத்தில் நனைந்திருக்கின்றது கரையின் அழகிய நினைவுகள்! ஆத்மார்த்தமான உணர்வில் உண்மையான அன்பில் நகரும் ஒவ்வொரு நொடியும் நம் இதயக்கூட்டில் சேமிக்கப்படும் நினைவுகளே. தாயிடம் அடி வாங்கி அழுத கணங்கள் இன்று நாம் நினைத்து மகிழ்ந்திடும் நினைவுகளாய் இல்லையா? அன்றைய கண்ணீர்துளிகளின் ஈரத்தில் நிறைந்திருக்கின்றது இன்றைய அழகிய நினைவுகள்!

நினைவுகள் என்பது இன்பத்தின் எல்லையில் சேகரிக்கப்படுவது அல்ல. மனதின் ஆழ்நிலை உணர்வில் கோர்க்கப்படுவது!

நாய்க்குட்டி போதும்!

புதைகுழியின் கடைசி அடிக்கு நாம் விழுந்து கொண்டிருக்கையில், உதவிக்கு நீட்டப்படும் கைகள் அனைத்தும் நம்மை மீட்டு விடுவதில்லை. ஏனோ ஒரு சிலரால் மட்டுமே நம்பிக்கை கொடுக்க முடிகின்றது காயம் பட்ட மனதிற்கு! எல்லோர் வாழ்விலும் அந்த தற்கொலை நிமிடங்கள் இருக்கத்தான் செய்கின்றது, குறைந்தபட்சம் மனதளவில்!! வாழ்ந்து விடுவது சிரமமில்லை; ஆனால், விழுந்ததும் எழுவதில்தான் கொஞ்சம் உறுதியும் மனோதிடமும் தேவைப்படுகின்றது!

கடந்து வந்த பாதையில் என்னுடன் நடந்து வந்த கதைமாந்தர்கள் நிறையவே இருக்கின்றனர். என்னுடன் பயணம் முடிந்து பாதை விலகி சென்றவர்கள் ஆயிரமாயிரம். சில தூர அடிகளில் தங்களின் சுவடுகளை அழுந்த பதித்தவர்களும் உண்டு! பல நூறு மையில் கடந்த போதும் நினைவை விட்டுத் தவறிப் போன காலடித்தடங்களும் உண்டு. மனிதர்கள் தவறிப்போன நினைவுத்தடங்களை வீட்டில் வாழ்ந்த செல்லப்பிராணிகள் நிரப்பி இருப்பது வியக்கத்தக்கது! தனது பசி தீர்த்த ஒரு ரொட்டித்துண்டிற்காக வாழ்நாள் முழுதும் நன்றி மறவா நாய்க்குட்டிகளுக்கு மத்தியில் தாழ்ந்து போன மனிதரும் உண்டு என் வாழ்வின் வரலாற்று பதிவுகளில்!! வரலாறு முக்கியம்தான். உலகின் வரலாறு அல்ல; தனித்திருக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும் நமது வரலாறு கற்றுக் கொடுக்கும் வாழ்வின் நிதர்சனத்தை!


இன்று நான் கற்றுக் கொண்ட நிதர்சனம்: துவண்டு கிடக்கும் மனதை மீட்க சில சமயங்களில் நமது காலடியைத் தொட்டவண்ணம் அமர்ந்திருக்கும் நாய்க்குட்டி போதும்!

Thursday, 5 July 2012

வாழ்க்கை ஒரு மெதுநடை.





இன்று,
வாழ்க்கை என்பது
விரைவுப் பேருந்து பயணம்.
விழிமூடி திறப்பதற்குள்
செலவழிந்து போகும்
பல மணி நேரம்...

நாளை என்ற கனவிற்காக
நரபலிகொடுக்கப்படும்
நிஜமான நிகழ்காலம்..
இந்த வாழ்க்கையின் பயணம்
முடிவுறும் இடம் நம் மரணம்....

அப்படியெனில்,
வாழ்க்கை என்பது என்ன?
"வாழ்க்கை"
ஓர் அழகான பயணம்..
இந்த பயணத்தின் குறிக்கோள்
சென்றடையும் இடம் அல்ல...
பயணிக்கும் ஒவ்வொரு நொடிதான்
இந்த வாழ்க்கையின் தத்துவம்...

ரசித்து நிதானமாய்
கடக்கும் வினாடிகள் இதயத்தை
வாழ வைக்கும்
சுகமான நினைவுகள்..

வாழ்க்கை ஒரு தென்றல்..
விழி மூடி அனுபவியுங்கள்..

வாழ்க்கை ஒரு பூங்கா
மகிழ்ச்சியுடன் நுகருங்கள்..

வாழ்க்கை ஒரு கவிதை
இன்றாவது ரசித்து படியுங்கள்...

வாழ்க்கை என்பது
ஒரு மெதுநடை..

காலாற நடந்து
காட்சிகளை ரசித்து
இளகிய இதயத்தோடு
நிறைவான நினைவுகளைச்
சுமந்து செல்வோம் நாமும்
ஒரு மெதுநடை..

அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.

Sunday, 24 June 2012

விதிவிலக்கு

தினம் ஒரு காயம்..
அதில் புன்னகை விதிவிலக்கு...
தினம் தாங்கொண்ணா பசி..
அதில் உணவென்பது ஒரு விதிவிலக்கு..
தினம் துளி துளியாய் போகும் உயிர்..
அதில் வாழ்வென்பது விதிவிலக்கு...
இவ்வகை வாழ்வுண்டு மனிதர் பலருக்கு..
அதில் நாம் விதிவிலக்கு...

Tuesday, 12 June 2012

நான் மனிதன் அல்ல;ஈழத்தமிழ்ப் பெண்

மண் தன் மடி மேல்
தாங்கி நிற்கும் என்னைப்
பரந்து விரிந்த வானம்
அணைத்துக் கொள்கிறது
தன் நீல நிற போர்வையில்....
... ஏனெனில்,
நிர்வாணமாய்க் கிடக்கிறேன்
நான் பூமிப் பந்தில்!!
மெல்ல ஒழுகிக் கொண்டிருக்கிறது
உதிரங்களினூடே எனதுயிர்!!!
மண் முழுதும் சிதறிக் கிடக்கு
எனது பெண்மை!
பூப்பெய்த கணமும்
கற்பிழந்த நொடியும்
நினைவில் இல்லை எனக்கு!
ஏனெனில்,
வெறி பிடித்த மிருகங்கள்
குதறிப் போட்ட மிச்சம்
நான்!!
வலி என்ற சொல்- இன்று
என்னுள் வலிமையற்றதாகி விட்டது!!
காலடித்தடங்களும் எள்ளி நகையாடும்
குரல்களும் கேட்கின்றது!!
பெண்ணென்றால் அணைத்து
மோகத்தினைத் தீர்த்துக் கொண்டிருப்பர்!
ஈழத்துதமிழ் பெண்ணென்பதால்
என்னைக் கிழித்துத்
தன் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
வழிந்து கிடக்கும் என் கற்பினை
மிதித்துக் களிக்கின்றனர்.
மரணம் கூட என்னை
அணு அணுவாய் ரசித்துக்
கொல்கிறது!!!
விழி நீர் ஒன்று கசிகின்றது
ஈழத்தமிழரின் நிலைக் கண்டு!
உடைகளற்ற நிராயுதபாணியாய் நிற்கும்
என்னைப் பார்த்துத் தூரத்தில்
நாய் ஒன்று ஓலமிடுகின்றது!!
நான் மனிதன் அல்ல
ஈழத்தமிழ்ப் பெண்!!
"

ஒரு புன்னகை..

சின்னதாய் ஒரு புன்னகை
உன் இதழோரம் பூக்கையில்
ஓராயிரம் அர்த்தங்கள்
என் மனம் படிக்கின்றது.
எனக்கான புன்னகை என்றும்
என்னால் தோன்றியது என்றும்
என் நினைவில் மலர்ந்தது என்றும்
கற்பனை செய்து கொள்ளும்
இதயம் இறுதி வரை
புரிந்து கொள்ளவே இல்லை!
உன் புன்னகையின் முற்றுப்புள்ளியில் கூட
இவள் காதலின் சொட்டுத்துளி
இல்லை என்று!!
"

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை...
அந்த இளவேனிற்காலம்
வேண்டும் மீண்டும் ஒரு முறை....
தரையை மறந்து
சிறகுக் கட்டி வானில் பறந்த
அந்த பருவம்
வேண்டும் எனக்கு
மீண்டும் ஒரு முறை...
கடந்த காலமும்
மரணமும் ஒன்றென்று
உணர்ந்த பின்னும்
ஏங்கும் இந்த மனம்
உண்மையாய் வாழத் துடிக்கிறது
மீண்டும் ஒரு முறை...