Thursday 23 February 2012

வினாடிகளின் விலாசங்கள்

                எழுத்துக்களைத் தாங்கும் நோட்டுப்புத்தகங்களுக்குப் புரியும் அந்த கீறல்களின் வலி. வலி மிகுந்த அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் மிகவும் வலியது!! எத்தனை மரணங்கள் அடைந்து மீண்டும் ஜனனங்கள் எடுத்திருப்பேன்? அந்த ஒவ்வொரு ஜனனங்களில்தான் எத்தனை எத்தனை மரண வலிகள்!! கடந்து வந்த பாதைகள் நாம் பயணிக்கும் பாதைகளைச் செம்மைப்படுத்திட வேண்டும். தூரத்தில் காத்திருக்கும் பாதையின் நீளம் எவரும் அறியார்.

               முட்கள் தைக்கும் பாதைகளில் ஆங்காங்கே சில பூக்களும் தூவப் பட்டிருக்கும் என்பதை அவப்பொழுது நான் உணர்ந்திருக்கிறேன். விழுந்து பின் முட்டி மோதி எழுகையில்தான் மனித வாழ்வின் மகத்துவம் அடங்கியுள்ளது என்று நம்புகின்றேன். சில சமயங்களில் தோற்பதன் மூலம்தான் வெற்றி அடைய முடியும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன். சில வெற்றிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறேன். எது எப்படி இருப்பினும் நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நானாகவே இருக்கவும் விரும்புகிறேன். என் இறந்த காலம் இறந்த பின்னும் நினைவுகளாய் எனக்கு மிகச் சிறந்த பாடங்களாய் என்னுடன் பயணிக்கின்றது. எதிரே காத்திருக்கும் என் எதிர்காலம் விடுகதையாய் வெறும் கனவுகளின் பிம்பங்களாய் என்னுடன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. என் இதயத்துடன் துடிக்கும் இந்நொடியோ என்னை வாழ அழைக்கின்றது. நினைவுகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டே கழிகின்றது என்னைச் சலிக்காமல் சுமக்கும் நிஜமான இவ்வினாடி...


அன்புடன்,
கோகிலா கன்னியப்பன்.

No comments:

Post a Comment