Wednesday 1 February 2012

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்!


பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

நடையிழந்த ஓவியம்
மூலையில் முடங்கிக் கிடக்காமல்..
மூச்சு முட்டி
கைகளில் நடைபயின்று...
துள்ளிக் குதித்தோடும்
காட்சிதனைப் பார்க்கையில்

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

ஐம்புலன்களும் அம்சமாய் அமைந்து...
ஆறறிவும் அழகாய் நிறைந்து..
வாழ்க்கைப் போராட்டங்களில்
நம்பிக்கை இழந்த மானிடனுக்குச்
சிறகொடிந்த பட்டாம்பூச்சி ஒன்று
புன்னகை அணிந்து..
கைகளில் முட்களை ஒடித்து...
பாடம் கற்பிக்கும்
காட்சிதனைப் பார்க்கையில்

பூமாதேவி ஏங்கிக் கிடக்கிறாள்
இவளின் பாதச்சுவடுகளுக்காய்.....

கால்களின் மேல்
நம்பிக்கை வைக்காமல்...
வாழ்க்கையின் மேல்
விதியைத் திணிக்காமல்...
பெற்றோரின் மேல்
சுமையை ஏற்றாமல்...
இறைவனின் மேல்
பழியைச் சுமத்தாமல்...

வாழ்வின் தத்துவம் உணர்ந்து...
தன்னம்பிக்கயின் ஊன்றுகோல் பிடித்து...
புன்னகையை இதழோடு நிறைத்து...
தத்தித் தத்திச் செல்லும்
இந்த காட்சிதனைக் காண்கையில்
மானிடம் ஏங்கிக் கிடக்கிறது
இவளின் தன்னம்பிக்கையை வேண்டி...

சின்னஞ்சிறு நட்சத்திரமே...
எங்களின் பாதங்களை
உன் தன்னம்பிக்கைக்குத்
தானம் செய்கிறோம்...
இனி
என்றென்றும் தளராமல்
"எங்களின் கால்கள்"

No comments:

Post a Comment